​”நடப்பாண்டில் இருந்தே 9-ஆம் வகுப்புக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-யின் புதிய அறிவிப்பை ஏற்க முடியாது; மத்திய கல்வி அமைச்சகம் இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். சிபிஎஸ்இ அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பால் தமிழக மாணவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ள சூழலில், அண்ணாமலையின் இந்த அறிக்கை அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​மேலும், மிகக் குறுகிய காலத்திற்குள் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். “ஏற்கனவே முன்பு அறிவித்தபடி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2029-30 ஆம் கல்வியாண்டிலிருந்து மட்டுமே இந்த மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக அண்ணாமலையே எக்ஸ் தளத்தில் தற்போது குரல் எழுப்பியுள்ளது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.