சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தற்போது ஒரு சுவாரசியமான விவாதம் தீப்பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய், வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக மாறுவார் என்ற ரீதியில் மீம்ஸ்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே, தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக முதல்வர் விஜய் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் பேசபொருளாக மாறியது. இந்த பரபரப்பான சூழலில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்த சர்ச்சை குறித்த கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறியதாவது, ஜோசியக்காரர்கள் பேசுவதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அது முழுக்க முழுக்க அவரின்  கருத்து  மட்டுமே. அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல; மாறாக, அது சில தனிநபர்களின் சொந்தக் கருத்து மட்டுமே என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொருளாளரே ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்” என்றார்.

மேலும் தனது பேட்டியின் போது, “தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே எங்களது முதல் இலக்கு; அந்த இலக்கு தற்போது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. அதேசமயம், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பதே எங்களது இறுதி இலக்காகும். ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்க நாங்கள் அனைவரும் இணைந்து தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றுவோம்” என்றும் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.