ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடும்பப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க சிறைக்குச் செல்ல நினைத்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்த விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜெய்ப்பூர் நிவாரு சாலையில் உள்ள ‘பவானி ஜூவல்லர்ஸ்’ நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், தங்க மோதிரங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளார். ஊழியர்கள் நகைப் பெட்டியை அவர் முன் வைத்தபோது, அவர்களின் கவனம் சிதறிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூ.20 லட்சம் மதிப்புள்ள 25 தங்க மோதிரங்கள் கொண்ட பெட்டியுடன் அப்பெண் தப்பியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் திலோக் சந்த் மற்றும் ஊழியர்கள் “திருடி… திருடி…” எனச் சத்தமிட்டவாறு வீதியில் துரத்தியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து மக்களும் இணைந்து, சுமார் 500 மீட்டர் தூரம் மூச்சிரைக்கத் துரத்திச் சென்று அப்பெண்ணை வளைத்துப் பிடித்துள்ளனர்.
பிடிபட்ட பெண்ணிடமிருந்து நகைப் பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டு, அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து மிளகாய் பொடி மற்றும் ஸ்பிரே பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார், நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய தீவிர விசாரணையில் அப்பெண் அளித்த வாக்குமூலம் அதிகாரிகளை வாயடைக்க வைத்தது.
ज्वेलरी शॉप में ग्राहक बनकर पहुंची चोरियां! एक ने बातों में उलझाया तो दूसरी गहने लेकर भागी, देखें वीडियोhttps://t.co/qXBO0lMStx — India TV (@indiatvnews) September 5, 2026 “>
“குடும்பப் பிரச்சினைகளால் நிம்மதியின்றி தவித்தேன்; சிறைக்குச் சென்றுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்பதால் தான் ஜெயிலுக்குப் போகவே இந்தத் திருட்டைச் செய்தேன்” என அப்பெண் எவ்வித பதற்றமுமின்றித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
