கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்கும் தருணங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு தனி சிலிர்ப்பைத் தரும். ஆனால், சில சமயங்களில் அந்த அனல் எல்லை மீறி வீரர்களுக்கு இடையே மோதலாக வெடித்துவிடுவதுண்டு. அப்படியொரு சம்பவம் தான் கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அரங்கேந்துள்ளது.

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுக்கும் இடையே நடைபெற்ற ஒரு சிறிய மோதல் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. போட்டியின் முதல் நாள் ஆட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது 17ஆவது ஓவரில் பந்து வீச வந்த அசிதா பெர்னாண்டோ, தனது அச்சுறுத்தும் வேகத்தால் ஜெய்ஸ்வாலை போல்ட் ஆக்கினார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியிலும், ஆக்ரோஷத்திலும் பெர்னாண்டோ ஜெய்ஸ்வாலை நோக்கி சில வார்த்தைகளைக் கூறினார்.

வழக்கமாக ஆட்டமிழந்ததும் அமைதியாக பெவிலியன் திரும்பும் ஜெய்ஸ்வால், இந்த முறை உடனடியாக நின்றார். பெர்னாண்டோ கூறிய வார்த்தைகளை கேட்டவுடனே  அவர் திடீரென திரும்பி பந்துவீச்சாளரை நோக்கி ஆக்ரோஷமாக நடந்தார். இருவருக்கும் இடையே மைதானத்திலேயே வார்த்தைப் போர் வெடித்தது.

ஆத்திரமடைந்த பெர்னாண்டோ, ஜெய்ஸ்வாலை நோக்கி தனது தலையை முன்னே கொண்டுவந்தார். உடனே சற்றும் பின்வாங்காத ஜெய்ஸ்வாலும் தனது தலையை முன்னோக்கி நீட்ட, இரு வீரர்களின் தலைகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை தீவிரமானது. களத்தில் இருந்த நடுவர்கள் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர்.

இந்த மோதலுக்குப் பிறகு நடுவர்கள் உடனடியாக ஐசிசி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு, ஐசிசி நடத்தை விதிகள் 2.12-ன் படி இருவரும் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டனர். குற்றத்தை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டதால், மேட்ச் ரெப்ரி ஆண்டி பைக்ராஃப்ட் முன் விசாரணைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி தண்டனை வழங்கப்பட்டது.

இரு வீரர்களுக்கும் தலா 25 சதவீத மேட்ச் ஃபீஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜெய்ஸ்வாலுக்கு சுமார் 3.5 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் முறைப்படி வீரர்களின் ஊதியம் மாறுபடுவதால் பெர்னாண்டோவுக்கு சற்று குறைவான தொகையே அபராதமாக விதிக்கப்படும்.

பண அபராதத்துடன் நின்றுவிடாமல், இரண்டு வீரர்களின் ஒழுக்கக் கணக்கிலும் தலா ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் வீரர்களின் ஆக்ரோஷம் ரசிக்கத்தக்கது தான், ஆனால் அது எல்லை மீறும்போது இதுபோன்று விலை கொடுக்க நேரிடுகிறது என்பதை இந்தச் சம்பவம் அப்பட்டமாக உணர்த்தியுள்ளது.