தனது தனித்துவமான சைகை மூலமே உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த டிக்டாக் கலைஞர் காபி லேம், தனது சொத்துக்கள் அனைத்தையும் தந்தை பெயரில் வைத்துள்ள தகவல் விவாகரத்து வழக்கின் மூலம் அம்பலமாகியுள்ளது. இத்தாலியில் வசிக்கும் செனகல் நாட்டைச் சேர்ந்த காபி லேம், கொரோனா காலத்தில் வேலை இழந்தபோது பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார். பேசாமலேயே, கைகளை விரித்து அவர் காட்டும் அந்த ‘சிம்பிள்’ சைகை அவரை இன்று உலகிலேயே அதிக பாலோவர்களைக் கொண்ட டிக்டாக் நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டும் இவருக்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான திரைமறைவுத் திட்டம் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காபி லேமின் மனைவி அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கமாகப் பிரபலங்களின் விவாகரத்து என்று வரும்போது, ஜீவனாம்சமாகப் பெரும் தொகையையும், சொத்துக்களில் பாதியையும் மனைவி தரப்பினர் கோருவது வழக்கம். காபி லேமின் மனைவியும் அதே எதிர்பார்ப்புடன் நீதிமன்றம் சென்றார்.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது ஒரு அதிரடி தகவல் வெளியானது. காபி லேம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதித்தாலும், அவர் பெயரில் ஒரு சிறிய வீடு, கார் அல்லது நிலம் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் வாங்கிய அனைத்து சொத்துக்களும், ஆடம்பரப் பொருட்களும் அவரது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் இணையத்தில் பரவியதுமே, ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். “வீடியோவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் காபி லேம் மிகவும் புத்திசாலி தான்” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தந்தை சொத்தில் மகன் பெயர் இருக்காது, ஆனால் மகன் சொத்து அனைத்தும் தந்தை பெயரில் இருப்பது நெகிழ்ச்சி என ஒரு தரப்பினர் கூறினாலும், விவாகரத்து போன்ற சட்டச் சிக்கல்களில் இருந்து தப்பிக்க காபி லேம் போட்ட மாஸ்டர் பிளான் இது என மற்றொரு தரப்பினர் சிரிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.

ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த காபி லேம், தனது தந்தை மீது கொண்ட அன்பினால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம், சட்ட ரீதியாக இதனை ‘சொத்து பாதுகாப்பு’ என்று அழைக்கிறார்கள். ஒருவேளை தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது சட்ட ரீதியாக ஏதேனும் சிக்கல்கள் வரும்போது, சொத்துக்கள் தன் பெயரில் இல்லை என்றால் அவை பறிபோகாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதே இதன் பின்னணியிலுள்ள தந்திரம்.

மேலும் வீடியோவில் கடினமான விஷயங்களை எளிமையாகச் செய்வது எப்படி என்று காட்டும் காபி லேம், தனது சொத்து மேலாண்மையையும் மிக எளிமையாக கையாண்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.