திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி நேரங்களில் அவசரத்தை தவிர்ப்பதற்காகவும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும் பொருட்டும் விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மஞ்சு விரட்டு, வடமாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா போன்ற போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண். 7 கடந்த 2017 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்படாமல் கடந்த காலங்களில் ஜல்லி கட்டு போட்டி நடத்தப்பட்ட கிராமங்களில் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான புகைப்படங்கள், கல்வெட்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் போன்ற ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

அதேபோல் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக அதன் உரிமையாளர்கள் கண்டிப்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழை மருத்துவ குழுவினரிடம் விழாவில் பங்கு பெறுபவர்கள் வழங்க வேண்டும். அரசிடம் இருந்து முன் அனுமதி  இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த அறிவுரைகளை பின்பற்றி உறுதிமொழிகளுடன் போட்டி நடத்த இருப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.