பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம் பதிவு செய்ய வேண்டும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரி சிவகுமாரி கூறியபோது, கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ் கருவி உள்ளது.

இதன் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசு திட்டத்தில் அரிசி  பெறும் கார்டுகளுக்கும்  தனித்தனி ரசீது பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக பி.எச்.எஸ் கார்டுகளில் அரிசி ஒதுக்கீடு 12 கிலோவாக இருக்கின்ற நிலையில், புதிய நடைமுறைப்படி 5 கிலோ அரிசி மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 7 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது. மேலும் அரிசி ஒதுக்கீடு 14 கிலோவாக இருக்கும் பட்சத்தில், 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 4 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது.

அதே போல் 16 கிலோவாக இருக்கும் பட்சத்தில் 10 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 6 கிலோ மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது. அதேபோல் 18 கிலோவாக இருக்கும் பட்சத்தில் 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 3 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து 20 கிலோவாக இருக்கும் போது 15 கிலோ மதிய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதை பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்க வேண்டும். அரசு ஒதுக்கீடு 20 கிலோ, 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும் பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் இதர பொருட்களை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர ரேஷன் கார்டுதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறையில் மத்திய அரசின் தொகுப்பில் முதல் வசதி அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு தகுந்தவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் திட்டத்தால் அரிசி பெரும் 4 லட்சம் முன்னுரிமை கார்டுகளுக்கு இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு  எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பது கார்டுதாரர்களுக்கு செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது. மேலும் இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.