தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பாக “சென்னை சங்கமம்” நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகம் விழாக்கோலம் பெற உள்ளது. தமிழகம் முழுவதும் தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அந்த வகையில் சர்வதேச புத்தக கண்காட்சி, ஜல்லிக்கட்டு சென்னை சங்கமம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் சென்னையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நடத்தப்படும் இதில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் சென்னை தீவு திடலில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதனை அடுத்து 14-ஆம் தேதி சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள்  என 16 இடங்களில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதேபோல் உணவு திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.