தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க தி.மு.க தயாரா என பா.ஜ.க மாநில தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 1967-ஆம் ஆண்டு தி.மு.க முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது அதனுடைய சொந்த பலத்தால் அல்ல. அதற்கு காரணம் சுதந்திரக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தான். அதேபோல 2021 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் வந்தது.

1967 ஆம் வருடத்திலிருந்து தி.மு.க ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிடவில்லை. பல கட்சிகளுடன் சேர்ந்தே போட்டியிட்டுள்ளது. இவ்வாறு பல கட்சிகளுடன் கூட்டணி சேர்க்கும் தி.மு.க சில தேர்தல்களில் படு மோசமான தோல்வியை சந்தித்ததும் உண்டு. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெறும். கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டது உண்டு. அதேபோல் இனிவரும் காலங்களிலும் அதை மீண்டும் செய்வதற்கு தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட தி.மு.க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.