தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தொடக்கம் முதலே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், விஜய் ரசிகர்கள் இதனைத் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, இது ஒரு நேரடித் தமிழ்ப் படம் என்று வாதிட்டு வந்தனர். இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியான பிறகு ஒட்டுமொத்தச் சூழலும் தலைகீழாக மாறியுள்ளது. டிரைலரில் வரும் காட்சிகள், ஆக்ஷன் பிளாக்குகள் மற்றும் கதாபாத்திரங்களின் நடை உடை பாவனைகள் என அனைத்தும் ‘பகவந்த் கேசரி’ படத்தின் டிரைலரை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளதால், நெட்டிசன்கள் தற்போது ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

படம் மட்டுமல்லாமல், டிரைலரின் எடிட்டிங் மற்றும் ஷாட்கள் கூட ஜெராக்ஸ் எடுத்தது போல் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “ஒரு சில காட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் டிரைலரே அப்படியே இருக்கிறதே” என்று நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் படம் இப்படி காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், படத்தில் விஜய் காட்டும் அதிரடி மாற்றங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் நிலவுகிறது.