தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை ஏற்படுத்த முயன்றால், அது தடையை ஏற்படுத்துபவர்களுக்கே பாதகமாக முடியும் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளியீடு தாமதமாகலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியதாவது: மிழகத்தை ஆளப்போகும் எங்களது தலைவரின் திரைப்படத்தைக் காணத் தமிழகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், படத்திற்குத் தடைகள் ஏற்படுத்த முயன்றால், அது தடையை ஏற்படுத்துபவர்களுக்கு எவ்விதத்திலும் வலுச் சேர்க்காது. நாளை முதலமைச்சராகப் போகும் ஒருவரின் திரைப்படத்தைத் தடுப்பது முறையல்ல. அவ்வாறு யாராவது எண்ணினால், அது அவர்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.”
தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் மத்திய அரசா அல்லது மாநில அரசா சிக்கல் ஏற்படுத்துகிறது என்ற கேள்விக்கு, “யார் அந்தப் பிரச்சினையைச் செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்; நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” எனப் பதிலளித்தார்.
பாஜக விவசாய அணித் தலைவர் பெரியார் குறித்துப் பேசியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “பெரியார் எங்களது கொள்கைத் தலைவர்களில் ஒருவர். ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்வார்கள்; அதற்கெல்லாம் இப்போது விமர்சனம் செய்யத் தேவையில்லை. சரியான காலத்தில் மக்கள் அவர்களுக்குப் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்,” என்று தெரிவித்தார்.
மேலும் திரைப்பட வெளியீட்டில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகச் செங்கோட்டையன் மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
