தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாயுத் தொல்லை. சிலர் இதைச் சாதாரண விஷயம்தானே என்று எண்ணி அலட்சியப்படுத்திவிட்டு, சோடா குடித்து ஏப்பம் விட்டால் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால், இந்த பிரச்சனையைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால், அது மூட்டு வலி மற்றும் வயிற்றுப் புண் போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

வாயுத் தொல்லை ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் செரிமானமின்மையே ஆகும். நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணம் ஆகாதபோது இந்த பிரச்சனை தலைதூக்குகிறது. மேலும் அதிகக் காரமான உணவுகள், எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகம் சாப்பிடுவது மற்றும் புகை, மது அருந்தும் பழக்கம் ஆகியவையும் வாயுத் தொல்லை உருவாக முக்கியமான காரணங்களாகும்.

உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்பு வகைகள், முள்ளங்கி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் உடலில் வாயுவை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியவை. எனவே, வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த வகையான காய்கறிகளைத் தினசரி உணவில் அதிகளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

வாயுப் பிரச்சனையில் இருந்து விடுபடச் சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். சீரகம் நமது வாயில் உமிழ்நீரை அதிகமாகச் சுரக்கச் செய்து, உண்ட உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால் வயிற்றில் வாயு உருவாகாமல் தடுத்து உடல் சோர்வையும் போக்க முடியும்.

அதேபோல், தினமும் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம். அல்லது இஞ்சி தேநீர் அருந்தி வரும்போது செரிமானம் சீராகி, வாயுத் தொல்லை முற்றிலும் நீங்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.