கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ரத்த பாசத்தின் உன்னதத்தை விளக்கும் வகையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

வீட்டின் மொட்டை மாடியில் ஏறி ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கால் நழுவி கீழே விழுகிறார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த அவரது சகோதரர், ஒரு நொடி கூட யோசிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கீழே விழும் தன் தம்பியைத் தனது இரு கைகளாலும் தாங்கிப் பிடிக்கிறார்.

சுமார் 15 வினாடிகள் ஓடும் இந்த சிசிடிவி காட்சியில், தம்பி கீழே விழுவதைப் பார்த்ததும் அண்ணனின் முகபாவனை மாறுவதும், உடனே அவர் பாய்ந்து சென்று தம்பியைத் தாங்குவதும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கீழே விழுந்த வேகத்தில் இருவரும் தரையில் உருண்டாலும், அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.

தம்பியின் உயிரைக் காப்பாற்றிய நிம்மதியில் அந்த அண்ணன் அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

“உறவு என்றால் இதுதான்” என்றும், “அந்த அண்ணனின் தைரியத்திற்கு ஒரு சல்யூட்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.