நடப்பு டி20 உலகக் கோப்பையில் இலங்கை மைதானங்களை அதிரவைத்த ஜிம்பாப்வே அணியின் ‘ஆர்மி’ ரசிகர்கள், தற்போது நிதி நெருக்கடி காரணமாக இந்தியா வந்து தங்கள் அணியை ஆதரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த வெற்றிப் பயணத்தில் அந்த அணியின் ‘பிராஸ் பேண்ட்’மற்றும் ‘காசில் கார்னர்’  ரசிகர் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது. மேளதாளங்கள், ஊதுகுழல்கள் மற்றும் ஒருமித்த குரலில் அவர்கள் எழுப்பிய முழக்கம், இலங்கை மைதானங்களை ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரே போலவே மாற்றியது.

இதுவரை சொந்தப் பணத்தைச் செலவு செய்து இலங்கைக்குப் பயணம் செய்த ரசிகர்கள், தற்போது சூப்பர்-8 போட்டிகளுக்காக இந்தியா வர நிதியின்றித் தவிக்கின்றனர். இது குறித்து ரசிகர் குழுவின் தலைவர் பால் முங்கோபா கூறுகையில்: “கால்பந்து அணிக்கு உதவுவது போல, உள்ளூர் தொழிலதிபர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும். எங்களது முக்கிய ரசிகர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மைதானங்களை மின்சார வேகத்தில் அதிரவைக்க விரும்புகிறோம். இது வெறும் சத்தம் மட்டுமல்ல, எங்கள் அடையாளம். தேசிய ஜெர்சியை அணிந்திருந்த எங்கள் முன்னோர்களுக்காக நாங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ரசிகர்களின் இந்தத் தியாகம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா, “ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து, சொந்தப் பணத்தைச் செலவழித்து எங்களை ஆதரிக்க வந்த ரசிகர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் ஆர்வம் எங்களுக்குப் பெரும் பலம்,” என்றார்.

இந்தியா வருவதற்கு நிதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், இலங்கையில் தங்களுக்குக் கிடைத்த நினைவுகள் வாழ்நாள் சாதனை என ரசிகர்கள் நெகிழ்கின்றனர். “நாங்கள் வந்தோம், பார்த்தோம், வென்றோம். இலங்கை மண்ணில் எங்களது பயணம் முடிவடைந்தாலும், எங்கள் ஆன்மா எப்போதும் அணியுடனே இருக்கும்” என ரசிகர் பிரதிநிதி மால்வின் குவாரம்பா தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னையில் இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே மோதவுள்ள நிலையில், மைதானத்தில் ஜிம்பாப்வே ரசிகர்களின் மேளச்சத்தம் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்