
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெயிலில் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அதிகப்படியான வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலை எக்காரணம் கொண்டும் வறண்டு போக செய்யக்கூடாது. பருவகால காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். பெரும்பாலும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டில் காற்றோட்டமான இடங்களில் அதிக நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இளநீர் மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். சோம்பல் அல்லது சோர்வாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.