சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கழிவுநீர் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த ஓ.சி.எப் என்று சொல்லக்கூடிய மத்திய படை தொழிற்சாலை குடியிருப்பு இருக்கின்றது. இந்த குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் இருவரும் சேர்ந்து இறங்கியுள்ளனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. இந்த விஷவாயு தாக்கியதில் மயங்கிய இருவரையும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்து போயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் கட்டிப் பிடித்து கதறி அழும் காட்சி கலங்க வைக்கிறது.