தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தனியார் நிறுவனங்களும் தனியார் துறைகளில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் புதிய வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதனால் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டு அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், ஐ.டி.ஐ மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.