திருமண நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வினோதமான பேனரின் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகிய அனைத்து கட்சிகளின் முக்கியமான தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண வீட்டார் அசத்தி உள்ளனர். விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் கோமான் இல்ல திருமணவிழா நெல்லையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருமண வீட்டார் சார்பாக அரசியல் கட்சித்தலைவர்களை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக வைக்கப்பட்ட பேனர் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.

அவற்றில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அந்த பேனரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணிய சுவாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாரத பிரதமர் நரேந்திர மோடி, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி, விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தமிழகத் தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.