விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை என எட்டு நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள். மலைப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் மற்றும் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

இந்நிலையில் சதுரகிரி கோவிலுக்கு தை மாசம் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை ஒட்டி இன்று முதல் வருகிற 22-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் மலைப்பகுதியில் நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை. அதேபோல் இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.