“செந்தில் பாலாஜி அறிவுரையின் பேரிலே…” என்று காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக 3 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐபிடிஎஸ் (IPTDS) கருத்துக்கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூவர்தான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

​கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே தவெக எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்புகொண்டு பேரம் பேசினார் என்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தவெக எம்.எல்.ஏ-வை இழுக்க திமுக தரப்பு திரைமறைவில் காய் நகர்த்தியதாக வெளியாகி இருக்கும் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.