கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக கட்சியின் பிரமுகர் திருவிக என்பவர் கடத்தப்பட்டு மர்ம நபர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் அதிமுக கட்சியை சேர்ந்த மாவட்ட ஐடி விங் இணைச்செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இதனால் திமுகவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைததாக கூறி முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் கரூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அவர் பேசியதாவது, கரூர் தனி மாநிலமாக இருக்கிறது. இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கம் நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள உளவுத்துறை செந்தில் பாலாஜியின் ஆட்கள். இவர்கள் முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள்.

செந்தில் பாலாஜி அடுத்ததாக இணைய போகும் கட்சி பாஜக. ஸ்டாலினின் குடும்பமே செந்தில் பாலாஜியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் தற்போது ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வந்த பிறகு தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.