பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், உயிரிழந்ததாகக் கருதி 17 நாட்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீரென உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 31-ம் தேதி நடந்த ஒரு குவாரி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அதில் அப்துல் வஹாப் என்ற தொழிலாளியும் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
விபத்தில் உடல் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால், அவரது ஆடைகளை வைத்து வஹாப் தான் அவர் என்று முடிவு செய்த உறவினர்கள், முறைப்படி உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.
குடும்பமே சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில், 17 நாட்களுக்குப் பிறகு வஹாப் திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றதைக் கண்ட உறவினர்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்த பின்பே நிம்மதி அடைந்தனர். தற்போது, வஹாப் இந்த 17 நாட்கள் எங்கே இருந்தார்? அவர் எப்படித் தப்பினார்? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வஹாப் என்று நினைத்து அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என்பது குறித்து உள்ளூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். உண்மை என்னவென்று கண்டறிய டிஎன்ஏ (DNA) பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
