ஈரான் போர் காரணமாக உலகப் பொருளாதாரத்தின் வேகம் பெருமளவு குறைந்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி விகிதத்தை 3.4 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாக ஐஎம்எப் குறைத்துள்ளது. போரினால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் கடும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் ஏற்பட்ட பணவீக்கம் அமெரிக்காவை மந்தநிலையின் (Recession) விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.
ஆனால், இவ்வளவு பெரிய உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியா மட்டும் தனது அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 0.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 6.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.
அதேபோல், பாகிஸ்தானுக்கும் எதிர்பாராத விதமாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடு நிம்மதி அடைந்துள்ளது. போர் இன்னும் நீடித்தால் உலகப் பணவீக்கம் 6 சதவீதம் வரை உயரும் என்றும், இது சாதாரண மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்றும் ஐஎம்எப் கவலை தெரிவித்துள்ளது.
