ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த நபர் நவீன ரக துப்பாக்கியால் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சரமா‌ரியாக சுட்டுள்ளார். இதில் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்த நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்தை தாங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்துவிட்டார். ஆனால் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது போலீஸ்சார் சுட்டதில் இறந்தாரா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் டேவிட் கோசாக் என்பதும் அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இதுவரை பதிவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. படிப்பில் சிறந்த மாணவராக தான் டேவிட் திகழ்ந்து வந்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு முன்பு இவர் தனது தந்தையையும் கொன்ற தகவல் வெளியாகி உள்ளது.