ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இதுபோக நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌ இந்நிலையில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு நாம் தமிழர் கட்சிக்கு ஓரளவு வாக்குகள் கணிசமான அளவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீமான் அருந்ததியர்கள் பற்றி சர்ச்சையான வகையில் பேசி சிக்கிக் கொண்டதால் தற்போது வாக்குகள் சரியும் என்று கூறப்படுகிறது.

தேமுதிகவை பொருத்தவரை விஜயகாந்துக்கு அங்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லப்படுவதால் குறைந்தபட்சம் 3000 முதல் 5000 வாக்குகள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கிழக்கில் முதலியார் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் கணிசமான அளவுக்கு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அதிமுக அந்த வாக்குகளை இழப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.