ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இதுபோக நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கட்சியின் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌ இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். சில நாட்களில் பிரச்சார முடிவடைய உள்ளதால் அனைத்து கட்சிகளும் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் உதயநிதி ஸ்டாலினும் களத்தில் இறங்க உள்ளார். மேலும் தமிழ்நாடு அரசியலில் மொத்த பார்வையும் தற்போது ஈரோடு கிழக்கு நோக்கி சென்றிருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.