ராஜஸ்தான் மாநிலம் ராவத்பட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி ஒருவர், விசித்திரமான முறையில் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, திடீரென வார்டில் இருந்த சுவரில் செங்குத்தாக ஏற முயன்றுள்ளார். அத்துடன் வினோதமான சத்தங்களை எழுப்பியதுடன், மற்றவர்கள் அஞ்சும் வகையில் அவரது உடல் அசைவுகள் இருந்துள்ளன. அங்கிருந்த சக நோயாளிகளும், மருத்துவப் பணியாளர்களும் இந்தச் சம்பவத்தைப் பார்த்து பீதியடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ ‘எக்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் இத்தகைய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வெளியானது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் இது ஏதோ ‘அமானுஷ்ய சக்தி’ அல்லது ‘பில்லி சூனியம்’ தொடர்பான விவகாரம் எனக் கூறி வருகின்றனர். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இத்தகைய வதந்திகளை மறுக்கின்றனர். இது தீவிரமான மனநலப் பாதிப்பு அல்லது நரம்பியல் தொடர்பான ‘ஹிஸ்டீரியா’ (Hysteria) போன்ற மருத்துவப் பிரச்சனையாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய நிகழ்வுகளை அமானுஷ்யத்தோடு தொடர்புபடுத்துவது ஆபத்தானது. முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் மனநல ஆலோசனைகள் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும். பொதுமக்கள் இத்தகைய வீடியோக்களைப் பார்த்து மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.