
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி மூலமாகவோ அல்லது ஒதுக்கப்பட்ட பாதையின் வாகனம் மூலமாகவோ சென்று காட்டை கண்டு களிக்கலாம். ஊட்டியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த காப்பகம் அமைந்திருப்பதால், ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கேயும் வருவதுண்டு.
இந்நிலையில் இங்கு கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முதுமலை காப்பகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதனால் அப்பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை அறிக்கையின் படி, இங்கு பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது வருகிற 22-ம் தேதி வரை புலிகள் காப்பகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.