
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த ரவீந்தர் என்பவர் தனது குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுள்ளார். அந்த காரில் அவரது மனைவி ரேணுகா (28), மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா (6) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் பிபி குடேம் அருகே சூர்யாபேட்டை பகுதியில் வைத்து எதிரே வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், கார் முற்றிலும் நொறுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சூர்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், ரவீந்தர், ரேணுகா மற்றும் ரிஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பஸ்சில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.