சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாமக கட்சியின் ‌ நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆம்ஸ்ட்ராங். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு அன்புமணி ராமதாஸ், ஆம்ஸ்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதாகவும், கூலிப்படையினரால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம் எனவும் ஒரு அரசியல் கட்சி தலைவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதை பற்றி முன்கூட்டியே தெரிவிக்காத உளவுத்துறை செயலிழந்துவிட்டது என்றும் கடுமையாக சாடியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காவல்துறையை கைவசம் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

இதேப் போன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் ‌ படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங்கும் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என நாள்தோறும் நிகழும் படுகொலைகள் மூலம் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். இதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியா என்று விமர்சித்துள்ளார்.

அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் பிறகு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 3 வருடங்களாக சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகிவிட்டது எனவும் முதல்வராக தொடர ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதேபோன்று திருமாவளவனும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.