நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து அந்த கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். சமீபத்தில் கூட மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மற்றும் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விலகினர். கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட அடுத்தடுத்து விலகி வரும் நிலையில் மாவட்ட செயலாளர்களும் ஏராளமானோர் விலகுகிறார்கள். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பதோடு அவரின் செயல்பாடுகள் பிடிக்காததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுகிறார்கள்.
இது பற்றி சீமானிடம் கேட்டால் அதைப் பற்றி எல்லாம் தான் கவலைப்பட போவது கிடையாது என்று கூறுகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து தற்போது மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். அதன்படி சேலம் மாவட்ட செயலாளர் தங்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது பற்றி மாவட்ட செயலாளர் தங்கம் கூறும்போது நாங்கள் பல மாதங்களாக எங்கள் உரிமைக்காக போராடிவரும் நிலையில் சீமானுக்கு இது பற்றி கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் அவர் எங்களுக்கு போராட்டத்தில் உறுதுணையாக இல்லை. மேலும் இதனால் மிகுந்த அதிருப்தியோடு கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
