ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையை சேர்ந்தவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜேந்திர சிங். இவர் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகையில் ராஜஸ்தானில் உள்ள பெண்களின் நிலையை முதலில் ஆராய வேண்டும் என சர்ச்சையான கருத்தை வெளியிட்டார்.

இதையடுத்து அமைச்சரவையில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் பேட்டி அளித்த போது, “நான் என்ன செய்தேன்? எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? சட்டசபையில் அமைச்சர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் என்னை கடுமையாக தாக்கினர். ராஜஸ்தான் சட்டசபை தலைவர் கூட நான் பேசுவதை கேட்கவில்லை. நான் பாஜகவில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அவர்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் வைத்திருந்த சிவப்பு நிற டைரியை தட்டி பறித்து விட்டார்கள். அந்த டைரி என் கையை விட்டு சென்றிருந்தாலும் அதன் இன்னொரு பிரதி என்னிடம் தான் இருக்கிறது. இது டிரைலர் தான் அடுத்தது படமே வெளியாகும். எனது சிவப்பு டைரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் தயாரா?” என்ற கேள்வியைக் கேட்டு திடீரென ராஜேந்திர சிங் அழத் துவங்கி விட்டார்.

ராஜேந்திர சிங்கின் சிவப்பு டைரியில் கட்சி எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் பற்றிய விபரம் தேர்தலின் போது குதிரை பேரத்தில் ஈடு பட்டது குறித்த விபரம் இருந்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே ராஜேந்திர சிங் குதாவின் சிவப்பு டைரியில் என்ன இருக்கிறது என்பது தெரிந்து கொள்ள மக்கள் விரும்புவதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.