வடகொரியாவில் இருக்கும் மக்கள் தென்கொரியாவில் இருப்பவர்களுடன் எந்த தொடர்பை வைத்துக் கொண்டாலும் தண்டனை வழங்கப்படும் கொடூரம் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்ததாக இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடகொரியாவை விட்டு வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், “தென்கொரியா சம்பந்தப்பட்ட சினிமாவை பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு 12 வருடங்கள் கடும் வேலை செய்யும் தண்டனையை வழங்கியுள்ளது.

இது போன்ற கடுமையான தண்டனையை கொடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. தென்கொரியாவின் கலாச்சாரங்கள் தங்கள் நாட்டில் ஊடுருவுவதை தடுப்பதற்காக தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.