உத்தரப் பிரதேச மாநிலம் பாக்வத் மாவட்டத்தில் உள்ள ‘காப்’ பஞ்சாயத்து, 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்குப் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, சிறுவர்கள் பொது இடங்களில் ஷார்ட்ஸ் (அரைக்கால் சட்டை) அணிவதற்கும், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் அரைகுறை ஆடைகளை அணிவது சமூக நெறிகளுக்கு எதிரானது என்றும், இது இளைய தலைமுறையினரிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளின் கல்வியைப் பாதிப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கியுள்ளனர். மேலும், திருமண நிகழ்வுகளைத் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது என்றும், வீடுகளிலேயே நடத்த வேண்டும் என்றும் இப்பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மண்டபங்களில் திருமணம் நடத்துவது குடும்ப உறவுகளை வலுவிழக்கச் செய்யும் என்றும், வீடுகளில் நடத்துவதே உறவுகளைப் பலப்படுத்தும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகச் செயல்படுத்த கிராமந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்தவும் காப் பஞ்சாயத்து நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடை மற்றும் பழக்கவழக்கங்களில் உரிய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் போன் மற்றும் அரைக்கால் சட்டை அணிவதை அவர்கள் பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.