தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பழக்கம் அதிகரித்து வருவது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள், “இதற்கு முன்னால் தமிழ்நாட்டை ஆண்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம்” என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்குத் தற்போது முன்னாள் சபாநாயகர் அப்பாவு அவர்கள் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, முதல்வர் விஜயை நேருக்கு நேர் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவியதற்கு முன்னாள் ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதை ஏற்க முடியாது என அவர் கொந்தளித்துள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு எதிராக அனல் பறக்கும் விமர்சனங்களை முன்வைத்துள்ள முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” என்று மிகக் காரசாரமாகக் கேட்டுள்ளார்.

விஜய் தனது சினிமா வாழ்க்கையில் நடித்த பல படங்களில் போதை மற்றும் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியே அப்பாவு இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், கடந்த கால ஆட்சியாளர்களைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, சினிமாவில் தான் செய்த தாக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என அப்பாவு பேசியுள்ள இந்த விவகாரம் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.