
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் தற்போது கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய காவல்துறைக்கு தெரியாமலா இருக்கும்? இன்று பரிதாபமாக இரண்டு இளைஞர்கள் உயிர் போய் இருக்கின்றதே உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?.
துருப்பிடித்த இரும்பு கையை வைத்துக் கொண்டு தன்னைத்தானே புகழ்ந்து தினமும் சூட்டிங் நடத்திக் கொண்டிருக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாகவே இல்லையா? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராக செல்ல வேண்டியது தானே? இன்று தமிழ் திரையுலகம் உங்களுடைய கைகளில் தானே இருக்கின்றது. தமிழகம் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுகவின் இருண்ட ஆட்சி காலத்தை விட தற்போது மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. அமைதியான பொது மக்களை மிக மிக மோசமான எதிர் விளைவுகளுக்கு தூண்டி கொண்டிருக்கின்றீர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும் என அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.