சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியினை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் திரு. ஜெயபால் மூர்த்தி அவர்கள் சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த திரு. ஜெயபால்மூர்த்தி அவர்களின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் திரு.முருகானந்தம் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.