தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகர் பகுதியில் நேற்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுவதை காவலர் ராஜசேகர் கவனித்தார். இதையடுத்து காவலர் உடனே அவர் அருகே சென்று எழுப்ப முயன்றுள்ளார். எனினும் அவர் மூச்சுவிட சிரமப்படுவது தெரியவந்தது. இதன் காரணமாக உடனே அவருக்கு சிபிஆர் சிகிச்சையளிக்க தொடங்கினார் காவலர் ராஜசேகர்.

பல நிமிடங்கள் போராடிய நிலையில், மயங்கிய நபரின் உடலில் அசைவுகள் தெரிந்து, மூச்சுவிடத் தொடங்கினார். அதனை தொடர்ந்து காவலர் ராஜசேகர் அவரை அருகிலுள்ள மருத்துமனையில் கொண்டு சேர்த்தார். தற்போது அந்நபர் நலமுடன் உள்ளார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் காவலர் ராஜசேகருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.