மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பார்மசி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக விமுக்தா ஷர்மா (54) என்பவர் இருந்துள்ளார். இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அஷூதோஷ் சீனிவஸ்தவா கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவரின் மதிப்பெண் சான்றிதழை வழங்காமல் தாமதித்து வந்துள்ளது. இது குறித்து மாணவர் கல்லூரி முதல்வரை சந்தித்து பலமுறை முறையிட்டும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கல்லூரி முதல்வர் விமுக்தா ஷர்மா பணி முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சீனிவஸ்தவா வழிமறித்து மதிப்பெண் சான்றிதழை கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது முதல்வர் மற்றும் மாணவருக்கு இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் மாணவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை விமுக்தா ஷர்மா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். அதன் பின் மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விமுக்தா ஷர்மா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மாணவர் சீனிவஸ்தவா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.