பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச் சென்றுவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், தங்கத்தால் பூசப்பட்ட பேனாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடு போயிருப்பதாகவும், சில சாமான்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் வித்யாரண்யபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வழக்கை தாமதப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.