
ஹரியானா மாநிலத்தில் மேகாலுக்ரா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 2 வயது மகனை கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மந்திரவாதி குழந்தையை சாத்தானின் மகன் என்று கூறியுள்ளார். இதனை மேகா உண்மை என நம்பிய நிலையில் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவர் தன் மகனை ஒரு கால்வாயில் வீசி கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் ஒரு பாலத்தின் மீது இருந்து தன் மகனை கீழே வீசிய நிலையில் அந்த பகுதியாக சென்றவர்கள் அதனை கவனித்து உடனடியாக அந்த பெண்ணை தடுத்தனர். பின்னர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேகாவை கைது செய்தனர். இது தொடர்பாக மேகாவின் கணவர் கபில் லுக்ரா புகார் கொடுத்துள்ளார்.
அவர் தன்னுடைய புகாரில் கடந்த சில மாதங்களாக மேகா ஒரு மந்திரவாதியை சந்தித்து வந்ததாகவும் அவர் சொன்னதால் சாத்தானின் குழந்தை என தன் மகனை நினைத்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி மேகா யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தன் மகனை கபில் தேடி அலைந்துள்ளார். இந்நிலையில் தற்போது தீயணைப்புத்துறையினரும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து குழந்தையை கால்வாயில் இருந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மந்திரவாதி பாட்டியா என்பவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.