உலகின் புகழ்பெற்ற போஸ்டன் மாரத்தான் போட்டியில், இலக்கை எட்ட முடியாமல் மயங்கி விழுந்த சக வீரரை இரு வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்று இலக்கை அடைய வைத்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜய் ஹரிதாஸ் என்பவர் தனது முதல் போஸ்டன் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கால்களில் தசைப்பிடிப்பு  ஏற்பட்டு நிலைகுலைந்து விழுந்தார். மீண்டும் எழுந்து ஓட முயற்சித்தும் அவரால் இயலவில்லை. தனது முதல் மாரத்தான் கனவு பாதியிலேயே முடிந்துவிடுமோ என்ற விரக்தியில் அவர் இருந்தார்.

அப்போது அங்கிருந்த ஆரோன் பெக்ஸ் (மஞ்சள் நிற சட்டை அணிந்தவர்) மற்றும் ராப்சன் ஒலிவேரா (வெள்ளை நிற சட்டை அணிந்தவர்) ஆகிய இரு வீரர்கள் ஓடி வந்து அஜய்க்கு உதவினர். அஜய்யின் கைகளைத் தங்கள் தோள்களில் போட்டுக் கொண்ட அவர்கள், அவரைத் தூக்கிக்கொண்டு ஓடி இறுதி இலக்கை அடைய வைத்தனர்.


குறிப்பாக, ராப்சன் ஒலிவேரா அந்தப் போட்டியில் தனது மிகச்சிறந்த நேரத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பில் இருந்தார். இன்னும் சில மீட்டர் தூரத்தைக் கடந்திருந்தால் அவர் புதிய சாதனை படைத்திருப்பார். ஆனால், சக வீரர் கீழே விழுந்ததைப் பார்த்ததும், தனது சாதனையை விட மனிதாபிமானமே முக்கியம் என முடிவெடுத்து அவருக்கு உதவினார்.

இது குறித்து ராப்சன் ஒலிவேரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, அது ஒரு நொடியில் எடுத்த முடிவு. நான் சாதனையை நெருங்க சில மீட்டர்களே இருந்தபோது, அஜய் கீழே விழுவதைக் கண்டேன். அவரை அங்கேயே விட்டுவிட்டுச் செல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் போட்டி முடிந்த பிறகு அஜய் மற்றும் ஒலிவேரா இருவரும் மருத்துவக் கூடாரத்தில் சிகிச்சை பெற்றனர். ஒரு விளையாட்டு வீரனுக்கு தனது சாதனையை விட சக மனிதனின் வலியே முக்கியம் என்பதை நிரூபித்த இவர்களின் செயல், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.