மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பொது விசாரணையின் போது, நிலத்தகராறு தொடர்பாக புகார் அளித்த ஒரு பெண்ணுக்கும் கலெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
அந்தப் பெண் கடந்த சில மாதங்களாக இதே பிரச்சினை தொடர்பாக பலமுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கலெக்டர், கோபமடைந்து “நீங்கள் இங்கே காட்சியை உருவாக்குகிறீர்கள்” என்று கூறி, அவரை அலுவலகத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில், அந்தப் பெண் அலுவலகத்தின் தரையில் அழுது கொண்டிருப்பதும், பெண் போலீசார் அவரை இழுத்துச் செல்வதும் காணப்படுகிறது.
View this post on Instagram
சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்த கலெக்டர், “இந்த வழக்கு தற்போது சிவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நீங்கள் எங்களை மிரட்டுகிறீர்கள். இங்கே வந்து தற்கொலை செய்வேன் என்று கூறினீர்கள் அல்லவா?” என கடுமையாக கேள்வி எழுப்பியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த நிலம் தொடர்பாக சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கலெக்டர், சம்பவத்தை விசாரிக்க CMO, SDM மற்றும் இணை ஆட்சியர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை அனுப்பியிருந்தார். அவர்கள் அளித்த அறிக்கைகளும் ஒன்றே மாதிரியாக இருந்ததாக கூறப்படுகிறது.
கலெக்டர் இதுகுறித்து கூறியதாவது: “சிவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை வருவாய்த் துறை அல்லது கலெக்டர் யாரும் உங்கள் நிலத்தை தொட முடியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் தற்கொலை செய்வேன் என்று மிரட்டுவது சரியான நடைமுறை அல்ல,” என்றார். மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பரவியதையடுத்து, கலெக்டரின் நடத்தை குறித்து பலர் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.
