சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள “ராஜலட்சுமி கார்ஸ்” என்ற ஷோரூமில் ஒன்றரை வருடமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி ரமேஷ் ஷோரூமில் இருந்த மாருதி காரை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

மறுநாள் காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் மாருதி கார் நிறுத்தியிருந்த இடத்தில் கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே இது குறித்து உடனடியாக மேனேஜருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஷோரூமில் வேலை பார்த்த ரமேஷ் காரை திருடி சென்றது தெரியவந்தது. எனவே இது குறித்து ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷ் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக ஷோரூம் நிர்வாகம் சம்பளம் தரவில்லை பலமுறை கேட்டும் சம்பளம் தராமல் திட்டினர்.

என்னைப்போல் பலருக்கும் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்திற்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்து காரை திருடியதாக ரமேஷ் ஒப்புக்கொண்டார். மேலும் காரை திருடியது தவறு என உணர்ந்த ரமேஷ் திருடிய 2 மணி நேரத்திலேயே ஷோரூமின் பின்புறம் காரை நிறுத்தியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு ரமேஷை விசாரித்த நீதிபதி இது போன்ற தவறுகளை இனி செய்யக்கூடாது என எச்சரித்து விடுவித்தார்.