பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

இந்த வீடியோவில் ரத்தம் சொட்ட சொட்ட காயம் அடைந்தவர்களை தன்னார்வலர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் வெடிகுண்டு விபத்தில் பழுதடைந்த மோட்டார் சைக்கிள்களும் வாகனங்களும் காய்கறிகளும் சாலையில் சிதறி கிடப்பதை காண முடிந்தது. இந்த வெடி விபத்துக்கு பலூசிஸ்தானின் முதல் மந்திரி மிர் அப்துல் குதூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தங்களுடைய தீய இலக்குகளை அடையாளம் நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறார்கள். அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். தீயவிரோத சக்திகளை அரசு வெற்றி பெற விடாது” என அவர் கூறியுள்ளார். மேலும் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் பலூசிஸ்தான் குண்டு வெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.