திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதியில் தி.மு.க.வின் ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த பணிகளைச் சேர்த்து, அனைத்து ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு வேண்டுமென்றே தன் மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும், நேருவை குறிவைத்தால் இங்கிருக்கும் தி.மு.க.வை அழித்துவிடலாம் என்ற உள்நோக்கத்துடன் இந்தச் சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த தான் எந்தத் தவறும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன் என்று உறுதியளித்தார்.
மேலும், அண்மையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேடு தொடர்பாக தன்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப் பரிந்துரைத்திருந்த பின்னணியில், அவர் ஏற்கனவே, “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
