கோவை மாவட்டம் அன்னூர் அருகே கள்ளக்காதலுக்காகத் தனது கணவரின் பாட்டியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் கணவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவைச் சேர்ந்த லோகேந்திரன் (38), நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். லோகேந்திரனின் பெற்றோர்கள் இல்லாத நிலையில், அவரது தாய் வழி பாட்டி மயிலாத்தாள் (60) இவர்களுடன் தங்கி இருந்தார்.
வீடியோ காலில் தொடங்கிய கள்ளக்காதல்:
அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஜாய் மெட்டில்டாவுக்கு, அதன் கிளை நிறுவனத்தின் மேலாளராக கர்நாடகாவில் பணிபுரிந்த நாகேஷ் (25) என்பவருடன் வீடியோ கால் மற்றும் செல்போன் உரையாடல்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் சந்தித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதி, வழக்கத்திற்கு முன்பே வேலைக்குச் செல்வதாக ஜாய்மெட்டில்டா கிளம்பியபோது, சந்தேகமடைந்த லோகேந்திரன் பல இடங்களில் தேடி, லாட்ஜில் இருந்து அவர் வெளியேறுவதைக் கண்ணால் கண்டுள்ளார்.
லோகேந்திரன் மிரட்டிக் கேட்டபோது, ஜாய்மெட்டில்டா தவறு நடந்துவிட்டதாக மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, நாகேஷை லோகேந்திரன் கண்டித்ததுடன், நிறுவனத்தில் புகார் அளித்ததால் இருவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை:
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி லோகேந்திரன் வெளியூர் சென்றிருந்த நிலையில், நாகேஷை வீட்டுக்கு வரவழைத்த ஜாய் மெட்டில்டாவுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த பாட்டி மயிலாத்தாள் அதிர்ச்சியடைந்து கண்டித்ததுடன், உறவினர்களுக்குத் தகவல் சொல்ல முயன்றுள்ளார்.
அதைக் கண்டு அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி, பாட்டி மயிலாத்தாளினின் முகத்தைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்தனர். பாட்டி மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடி, அவரது உடலையும் புதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் வெளியில் தெரியாததால், பாட்டியைக் கொன்றதுபோலவே கணவர் லோகேந்திரனையும் கொன்றுவிட்டு, சொத்துக்களை விற்று இருவரும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜாய்மெட்டில்டா கள்ளக்காதலன் நாகேஷிடம் யோசனை கூறியுள்ளார்.
கொலையாளி சிக்கியது எப்படி?:
யோசனைக்குச் சம்மதித்த நாகேஷை, ஜாய் மெட்டில்டா கடந்த 22ஆம் தேதி இரவு வீட்டுக்கு வரவழைத்தார். லோகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜாய் மெட்டில்டா கதவைத் திறந்துவிட, நாகேஷ் உள்ளே நுழைந்து லோகேந்திரனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்க முயன்றார்.
ஆனால், லோகேந்திரன் திடீரென கண்விழித்துப் போராடவே, நாகேஷ் பின்பக்க கதவு வழியாகத் தப்பிச் சென்று கர்நாடகாவுக்கு ஓடிவிட்டார். அடையாளம் தெரியாத நபர் தன்னைத் தாக்கிக் கொல்ல முயன்றதாக லோகேந்திரன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜாய் மெட்டில்டாவின் செல்போன் அழைப்புகளைக் கண்காணித்ததில், கணவரைக் கொலை செய்ய முயன்றதில் அவருக்குப் பங்கு இருப்பது லோகேந்திரனுக்குத் தெரிய வந்தது.
மீண்டும் கஞ்சப்பள்ளி பகுதிக்கு வந்த நாகேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நாகேஷ் மற்றும் ஜாய் மெட்டில்டாவிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பாட்டியைக் கொலை செய்ததையும், கணவரைக் கொல்ல முயன்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மயிலாத்தாள் உடலைத் தோண்டி எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
