கோவை மாநகராட்சியில் 59 இளநிலை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், 654 பேர் பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு தனக்கு முன்னுரிமை வழங்கி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளரான ஈஸ்வரி என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் உரிய விளம்பரங்கள் கொடுக்காததாலும், உரிய தகுதிகள் இருந்தும் தன்னால் விண்ணப்பிக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு 54 பேரின் பணி நியமனங்களையும் ரத்து செய்வதோடு தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனம் தொடர்பாக உரிய முறையில் விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாதது மனுதாரரின் தவறு என்றும் 54 பேரில் பணி நியமனங்களை ரத்து செய்யுமாறு கூறுவதற்கு மனுதாரருக்கு எந்தவித அடிப்படை உரிமைகளையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறினார். மேலும் 54 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.