ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதியினர் புதுகொத்துகாடு பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்றபோது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் தூங்க சென்றனர்.

நேற்று காலை அந்த பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் பிரியதர்ஷினியும், சந்திரனும் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தூங்க சென்ற பிறகும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவரை தடுப்பதற்காக சந்திரன் சென்றுள்ளார். எனவே கிணற்றில் குதித்த பிரியதர்ஷினியை காப்பாற்றுவதற்காக சந்திரனும் கிணற்றில் குதித்திருக்கலாம். அதன்பிறகு நீச்சல் தெரியாததால் இரண்டு பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.