இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ரன்களை எம்எஸ் தோனி தியாகம் செய்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்காக செய்ததை, இதுவரை எந்த ஒரு கேப்டனாலும் செய்ய முடியவில்லை. இதுவரை இந்திய அணிக்காக 3  ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் தோனி ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதே நேரத்தில், தோனியின் சக வீரரும், முன்னாள் பேட்ஸ்மேனுமான கெளதம் கம்பீர், உலகக் கோப்பைக்கான கிரெடிட் ஒரு சிக்ஸருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒட்டுமொத்த அணிக்கும் அல்ல என்றும் பலமுறை தனது அறிக்கைகளில் விமர்சித்து கூறியுள்ளார்.

ஆனால் இந்த முறை தோனி குறித்து கம்பீர் அப்படியே  மாற்றி ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார். இந்த முறை கம்பீர் முன்னாள் கேப்டனை பாராட்டியுள்ளார். தோனி தனது சர்வதேச ரன்களை அணியின் கோப்பைக்காக தியாகம் செய்துள்ளார் என்று கம்பீர் கூறினார். தோனி தனது வாழ்க்கையில் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம், ஆனால் அவர் தன்னை விட அணியை முன்னிலைப்படுத்தினார் என்று முன்னாள் பேட்ஸ்மேன் கூறினார்.

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசுகையில், “எம்எஸ் தோனி தனது சர்வதேச ரன்களை அணி கோப்பைக்காக தியாகம் செய்தார். அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் 3வது நம்பர் பேட்ஸ்மேனாக இருந்திருப்பார். அவர் அதிக ரன்களை எடுத்திருக்க முடியும், ஆனால் அவர் அணியை முன்னிலையில் வைத்திருந்ததால் அணிக்காகவும், கோப்பைக்காகவும் அவருக்குள் இருந்த பேட்ஸ்மேனை அவர் தியாகம் செய்தார்” என்று பெருமையாக பேசினார்.

 ஐசிசி கோப்பை தோனியின் தலைமையில் மட்டுமே வந்தது.

தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோபையையும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையையும் இந்திய அணி வென்றது. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் டீம் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வடிவத்தில் ஐசிசி கோப்பையை வென்றது. அப்போதிருந்து, ஐசிசி கோப்பைக்காக இந்தியா காத்திருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஐசிசி கோப்பையும் கிடைக்கவில்லை.

இம்முறை 2023 ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது, இதில் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன், ரோஹித் ஷர்மாவின் தலைமையில் 2023 ஆசிய கோப்பையை அந்த அணி வென்றுள்ளது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.